Thursday, January 7, 2016

நான் கண்ட பாரதி-3

அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் தெய்வ நம்பிக்கை கொண்ட மானுடன்.
நீயே சரணம், நினதருளே சரணம் 

என்று பாடினாலும்,ஏதோ நீயே பார்த்து எனக்கு அருள் செய் என்று இறைவனின் discretion க்கு விட்டு விடவில்லை.தன் இனத்திற்கும் தனக்கும் என்னென்ன வேண்டும் என்று பட்டியல் போட்டு வரம் கேட்பான்.
வேண்டாதனைத்தையும் நீக்கி வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே 
என்று demand வேறு செய்வான்.எனக்கு என்ன வேண்டும் என்பதை எல்லாம் நானே கணக்காக சொல்லி விடுகிறேன், நீ வெறுமே SANCTIONED என்று கையெழுத்து இட்டால் மட்டும் போதும் என்று உரிமையாய் , செல்லமாய், கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்...எப்படி.
.பூமண்டலத்தில் அன்பும் பொறையும் 
விளங்குக: துன்பமும்,மிடிமையும் நோவும் 
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் 
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ 
திருச்செவி கொண்டு திருவுளம் இறங்கி 
'அங்கனே யாகுக' என்பாய் அய்யனே 
சக்தியிடமும், முருகனிடமும்,கணபதியிடமும் அப்படி ஒரு அந்யோன்ய பாவம் !
நம் இச்சைகளை செவி மடுத்து பூர்த்தி செய்யும் விநாயகனை வேண்டுகிறான்..
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் 
கேளாய் கணபதி!
...கனக்குஞ்செல்வம் ,நூறு வயது....இவையும் தர நீ கடவாயே 

இந்த இரண்டு வரங்களும் அவனுக்கு வாராமலே போயின...கடைசி காலம் வரை செல்வம் சிறிதும் இல்லாமல்  வறுமையிலேயே உழன்று, நூறு இல்லை, ஐம்பது வயது வரை கூட வாழாமல் போன அந்த மனிதன் இவ்வுலகை விட்டுப் பிரிந்து போய்  விட்டாலும், அவன் பாட்டும், புகழும் என்றென்றும் சிரஞ்சீவியாக நம்முடன் இருக்கத்தான் போகின்றன. அவன் கனவு கண்ட தேச விடுதலை கிடைத்து 68 வருடங்கள் ஆனா பின்னாலும் அவன் வேண்டிய சமுதாய சீர்திருத்தங்கள் பலவும் இன்னும் கனவாகவே இருக்கக் காண்கிறோம்.அவன் சிந்தனைகளை நனவாக்குவதே அந்த முண்டாசுக் கவிஞனின் நினைவுக்கு நாம் செய்யக்கூடிய முதல் மரியாதை...சிந்திப்போம், செயல் படுவோம், செயல் படுத்துவோம்! 

வாழ்க பாரதி!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

நான் கண்ட பாரதி-2

தாய் மொழியான தமிழின் உயர்வைப் பாடாமல் இருப்பானா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் 
இனிதாவதெங்கும் காணோம் 

என்றானே...மொழி வெறியனோ? என்று ஐயப்பாடு தோன்றும்...மொழிப் பற்று என்பது வேறு, கண் மூடித்தனமான வெறி என்பது வேறு என்று அறிந்த விவேக சூரியன் (ஞான பானு) அவன்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலே மகிமை இல்லை 

என்று அறிவுறித்தி,

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் 
இறவாத புகழுடைய புது நூல்கள் 
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் 

என்று மொழியின் வளர்ச்சிக்கு வித்திடுவான்.

தாய் மொழியைப் பாடியவன் தாய் நாட்டை  மறப்பானா?

பாருக்குள்ளே நல்ல நாடு,எங்கள் பாரத நாடு 

என்று பெருமை பேசி,ஒளி  மயமான எதிர் காலத்தை கனவு கண்டு, புதிய கோணங்கியாய் நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என்று குறி சொல்வான்.
திரைப் படங்களிலே காதலனும் காதலியும் மண முடித்தால் 'and they lived happily ever after ' என்று முடித்துவிடுவார்கள்...வாழ்க்கை என்னும் பெரிய கதை இனிமேல்தான் துவங்கப் போகிறது என்பதை மறந்து.அதே போல், விடுதலை மட்டுமே லட்சியம் என்றில்லாமல், விடுதலைக்குப்பின் இந்த நாட்டை எப்படி ஆள்வது, என்னென்ன செய்ய வேண்டும் என்று,தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றப் பாதையையும் துறை வாரியாக - department wise -planning செய்கிறான்.

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் 
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் 
.....காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் 
கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் 

என்று தொழிலுக்கும் ,கல்விக்கும்,கலைகளுக்கும் பசுமைக்கும் குரல் கொடுக்கின்றான்.Inter linking of rivers  பற்றி அன்றே பாடி விட்டான்.

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் 
என்று ஒரு தீர்கதரிசியால் மட்டுமே உணர்ந்து சொல்ல முடியும்.

மகாகவி மட்டுமா, கவித்துவம் வாய்ந்த ரசிகனும் கூட.
சமத்துவம், பெண்ணுரிமை, மொழி, தேசம்...சரிதான் படு serious ஆனா ஆசாமிதான் என்று தோணும். ஆனால் அவனைப் போல் உணர்ச்சியும், மகிழ்ச்சியும், ஆசையும், காதலும் சேர்ந்த ரசிகன் வேறொருவர் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம்.இல்லை என்றால், கிழிந்த மேலாடைக்கு மாற்று துணி இல்லாமல், கருப்பு கோட் அணிந்து அதை மறைத்து திரிந்த வறுமையிலும், 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா, இறைவா 

என்று மகிழ்ந்து கூத்தாட சாதாரண மனிதனால் சாத்தியமா? 
காணி நிலம் வேண்டுவான்..அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் 'அழகிய 'தூணும் நன் மாடங்களும் கொண்டதாய்' ஜஸ்ட்ஒரு மாளிகை...' இன்னும் கேணி...தென்னை மரமும் இளநீரும்..தென்னை மரம் காற்றிலாட தென்றலும், தென்னங்கீற்றின் ஊடே வரும் நிலா வெளிச்சமும் ...குயில் ஓசையும்....அப்பப்பா...போதுமா...? எப்படிப் போதும்...தனிமையிலே இனிமை காண முடியுமா...
ஆதலினால் காதல் செய்வீர் 
என்றவனாயிற்றே  ..ஆகவே, இன்னும் வேண்டுவான்...பாட்டுக் கலந்திட 'பத்தினிப் பெண்ணும்' அவளோடு 'களிக்கக்  கவிதையும்'....

தெவிட்டாத இனிப்பான வாழ்வை இதை விட ரசனையாய் வேண்டிட முடியுமா? அவன் இயற்கையை, மனித வாழ்வை , வாழ்வின் சுவையை அனுபவிக்க ஆசைப் பட்ட ரசிகன்...பின்னர்தான் கவிஞன்.

நான் கண்ட பாரதி -1

பாட்டுக்கொரு புலவன் பாரதி...என்பார்கள்.ஏன், பாட்டுக்கள் மட்டுமா  இயற்றினான்? உரைநடையிலும்தான் அவன் கோலோச்சினான். விவேகபானு,சுதேசமித்திரன்,இந்தியா  என்று செய்திதாள்களிலும் பத்திரிகையாளனாக பணி  புரிந்த அந்த சீர்திருத்தவாதி, சிறுகதைகளும் எழுதினான். ஆனாலும் அவன் மேதாவிலாசமும் , புரட்சி ஓங்கிய கருத்துக்களும் , மொழி ஆளுமையும் விஞ்சி நின்றது அவன் கவிதைகளில்தான்.

இலக்கியத்தை வடிப்பதற்கு மட்டும் அல்ல அதை படிப்பதற்கும் ரசிப்பதற்கும் கூட பண்டிதன் போல் பாண்டித்த்யம்  தேவை என்கிற நிலைமையை தலை கீழாய் புரட்டிப் போட்டது அவன் எழுத்து. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவர்க்கும் புரியும்படி, மேன்மையான இலக்கியத்தை சாமான்யனிடத்தில் கொண்டு போய் சேர்த்தவன் இந்த நூற்றாண்டுக் கவிஞன்.எண்ணத்தில் எழுச்சியும் எழுத்தில் எளிமையும் அவன் முத்திரை, முகவரி.

எப்படிப் பாடினனோ ...வசன கவிதையா, காவடிச்சிந்தா, நாட்டுப்புற பாடலா,வெண்பாவா, விருத்தமா,தீம் தரிகிட என்று ஜதியா ...எல்லாம் அவன் பல்லக்கில் ஏறி வரும்.
எதைப் பாடினான்?...இல்லை இல்லை எதைத்தான் பாடவில்லை...
தமிழ் மொழி இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அந்த மொழி மூலம் பொது மக்களிடம், தலைமுறைகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி அவனை 'மகாகவி' என்று நாம் அழைப்ப து உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

குழந்தைகளுக்காக பாடினானே ...அது பாடல் இல்லை, பாடம்!ஆஹா ! குழந்தைகளுக்கான பாடமா....அப்போ பெரியவங்கதான் மொதல்ல உட்கார்ந்து படிக்கணும்...! இல்லை, இது குழந்தைகள் தாமே அறிந்து படிக்க வேண்டிய வாழ்க்கை பாடம்! இன்னும் சொல்லப் போனால் ...a  lesson in life 's basic values .சரிதான், moral science lesson ஆ..குழந்தைகள் சொல் பேச்சு கேட்டதாய் சரித்திரம் உண்டா...அதனால் chocalate குடுத்து அவர்களை வசியம் பண்ணுவது போல், அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை சொல்லி அழைக்கிறான்.

ஓடி விளையாடு பாப்பா....

விளையாட்டு என்றால் ஓடி வராத குழந்தைகளும் உண்டோ...? அருகே வந்தபின், நல் புத்தி சொல்லுவான்....

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...

ஒரு விஷயம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.ஓடி விளையாடு என்றான்...உட்கார்ந்த இடத்திலே Angry Bird ம் Temple ரன் நும் விளையாடச் சொல்லவில்லை. பிற்கால சந்ததியர்களின் போக்கு அன்றே தெரிந்து , couch potato வாக மாறாமல் வலுவான உடலைப் பேண வழி சொல்லுகின்றான். தனித் தீவாய் வாழாமல், சேர்ந்து வாழப் பழக, 

கூடி விளையாடு பாப்பா...

என்று team play ஐ வாழை பழத்தில் ஊசி போல் ஏற்றுவான் . காக்கை, குருவி, கோழி, ஆடு, மாடு, நாய்...இந்த உயிரினங்கள் எல்லாம் மனிதனை அண்டிப் பிழைக்கும் ஜீவராசிகள் என்பதால்,அவைகளை பேணிக் காக்கும் பொறுப்பு மனிதனுடையது. ஆகவே, சகல ஜீவராசிகளிடமும் இணக்கமாய் வாழச் சொல்லுவான். எடுத்த எடுப்பிலேயே எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொள்ளச் சொல்லவில்லை...அதை விட முக்கியம்...தனி மனித ஒழுக்கமும், பொது நலமும், தேசிய ஒருமைப்பாடும், தெய்வ சிந்தனையும்...அதைத்தான் அவன் தேனில் குழைத்த மருந்து போல் பாப்பா பாட்டில் புகட்டுகிறான்.!

இளைய சமுதாயத்தை கூப்பிடுகிறான்...எதற்கு?தேசத்தின் வருங்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் சமுதாயச் சிற்பிகள் அவர்கள்தானே...அவர்களை பெரியோர்கள் நாம் சரியாக வழி நடத்த வேண்டாமா? சரிதான், அது என்ன அவ்வளவு சுலபமா...வா, நல்ல புத்தி சொல்கிறேன், guide செய்கிறேன் என்றால் அய்யோ ! ஆளை விடுடா சாமி என்று காத தூரம் ஓட மாட்டார்களா...? அறியாதவனா நம் அய்யன்...? என்ன சொன்னால், எப்படி சொன்னால் காரியம் நடக்கும் என்ற psychology தெரிந்த தந்திரவாதி அவன்! ஒரு யுக்தி செய்கிறான்...ஒருவன் நல்லவனோ இல்லையோ, 'அவன் ரொம்ப நல்லவன்டா' என்று good conduct certficate குடுத்து விட்டால், அப்புறம் எதிர்பார்த்ததுக்கும் மேலாக மிகச் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.அது ஒரு tactic -self fulfilment prophecy போல.நீ சரியே இல்லை, உனக்கு போறாது...அப்படி, இப்படி என்று சொல்லாமல், 

ஒளி  படைத்த கண்ணினாய், வா வா வா !
உறுதி கொண்ட நெஞ்சினாய், வா வா வா!.....
வலிமை கொண்ட தோளினாய்,.....
 எளிமை கண்டிரங்குவாய்....வா வா வா 

 என்று போற்றி அழைக்கிறான். ஏன் ? கொஞ்சம் தட்டிக் கொடுத்தால் வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டே வரும் வயது என்று இந்த இளைய சமுதாயத்தின் துடிப்பை நன்கு அறிந்த நல் ஆசிரியனல்லவா அவன்!

Emancipation of women ...

நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை கொண்ட புதுமைப் பெண்டிரின் உரிமையை கொண்டாடிய முதல் 'Complete Man ' பாரதி! அதுவும் ஒரு நூற்றாண்டு முன்பே.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ...

என்று பெண்களை முன்னேற்றப் பாதையில் நடக்க அல்ல...களித்து கும்மியடிக்க வைத்த பெண்ணுரிமை patron நம் பாரதி!

என்ன இல்லை அவன் கவிதையில்?

சமூக அக்கறை இல்லையா...? 
நாம் செய்யும் செயல்களில் பிழை இருப்பின், அதை தப்பு, தவறு, சிறுமை, கொடுமை, குற்றம் என்று பிரித்து பாகு படுத்துவோம். ஆனால் ஜாதி பேதம் என்கிற செயலை, பாரதி தவறு என்றோ குற்றம் என்றோ கூட சொல்வதில்லை...

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் 

பாவம் -என்று சம்மட்டியால் ஒரே அடி வைக்கிறான்.பிராயச்சித்தமே இல்லாத பாவம்!

அறச் சீற்றம் இல்லையா?

தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
என்று தார்மீகக் கோபம் வளர்ப்பான்...
பாதகஞ்செய்வோரைக் கண்டால் 
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா...
மோதி மிதித்து விடு பாப்பா, அவர் 
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா 
என்று ரௌத்திரம் பழகச் சொல்வான்