பாட்டுக்கொரு புலவன் பாரதி...என்பார்கள்.ஏன், பாட்டுக்கள் மட்டுமா இயற்றினான்? உரைநடையிலும்தான் அவன் கோலோச்சினான். விவேகபானு,சுதேசமித்திரன்,இந்தியா என்று செய்திதாள்களிலும் பத்திரிகையாளனாக பணி புரிந்த அந்த சீர்திருத்தவாதி, சிறுகதைகளும் எழுதினான். ஆனாலும் அவன் மேதாவிலாசமும் , புரட்சி ஓங்கிய கருத்துக்களும் , மொழி ஆளுமையும் விஞ்சி நின்றது அவன் கவிதைகளில்தான்.
இலக்கியத்தை வடிப்பதற்கு மட்டும் அல்ல அதை படிப்பதற்கும் ரசிப்பதற்கும் கூட பண்டிதன் போல் பாண்டித்த்யம் தேவை என்கிற நிலைமையை தலை கீழாய் புரட்டிப் போட்டது அவன் எழுத்து. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவர்க்கும் புரியும்படி, மேன்மையான இலக்கியத்தை சாமான்யனிடத்தில் கொண்டு போய் சேர்த்தவன் இந்த நூற்றாண்டுக் கவிஞன்.எண்ணத்தில் எழுச்சியும் எழுத்தில் எளிமையும் அவன் முத்திரை, முகவரி.
எப்படிப் பாடினனோ ...வசன கவிதையா, காவடிச்சிந்தா, நாட்டுப்புற பாடலா,வெண்பாவா, விருத்தமா,தீம் தரிகிட என்று ஜதியா ...எல்லாம் அவன் பல்லக்கில் ஏறி வரும்.
எதைப் பாடினான்?...இல்லை இல்லை எதைத்தான் பாடவில்லை...
தமிழ் மொழி இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அந்த மொழி மூலம் பொது மக்களிடம், தலைமுறைகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி அவனை 'மகாகவி' என்று நாம் அழைப்ப து உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.
குழந்தைகளுக்காக பாடினானே ...அது பாடல் இல்லை, பாடம்!ஆஹா ! குழந்தைகளுக்கான பாடமா....அப்போ பெரியவங்கதான் மொதல்ல உட்கார்ந்து படிக்கணும்...! இல்லை, இது குழந்தைகள் தாமே அறிந்து படிக்க வேண்டிய வாழ்க்கை பாடம்! இன்னும் சொல்லப் போனால் ...a lesson in life 's basic values .சரிதான், moral science lesson ஆ..குழந்தைகள் சொல் பேச்சு கேட்டதாய் சரித்திரம் உண்டா...அதனால் chocalate குடுத்து அவர்களை வசியம் பண்ணுவது போல், அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை சொல்லி அழைக்கிறான்.
ஓடி விளையாடு பாப்பா....
விளையாட்டு என்றால் ஓடி வராத குழந்தைகளும் உண்டோ...? அருகே வந்தபின், நல் புத்தி சொல்லுவான்....
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...
ஒரு விஷயம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.ஓடி விளையாடு என்றான்...உட்கார்ந்த இடத்திலே Angry Bird ம் Temple ரன் நும் விளையாடச் சொல்லவில்லை. பிற்கால சந்ததியர்களின் போக்கு அன்றே தெரிந்து , couch potato வாக மாறாமல் வலுவான உடலைப் பேண வழி சொல்லுகின்றான். தனித் தீவாய் வாழாமல், சேர்ந்து வாழப் பழக,
கூடி விளையாடு பாப்பா...
என்று team play ஐ வாழை பழத்தில் ஊசி போல் ஏற்றுவான் . காக்கை, குருவி, கோழி, ஆடு, மாடு, நாய்...இந்த உயிரினங்கள் எல்லாம் மனிதனை அண்டிப் பிழைக்கும் ஜீவராசிகள் என்பதால்,அவைகளை பேணிக் காக்கும் பொறுப்பு மனிதனுடையது. ஆகவே, சகல ஜீவராசிகளிடமும் இணக்கமாய் வாழச் சொல்லுவான். எடுத்த எடுப்பிலேயே எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொள்ளச் சொல்லவில்லை...அதை விட முக்கியம்...தனி மனித ஒழுக்கமும், பொது நலமும், தேசிய ஒருமைப்பாடும், தெய்வ சிந்தனையும்...அதைத்தான் அவன் தேனில் குழைத்த மருந்து போல் பாப்பா பாட்டில் புகட்டுகிறான்.!
இளைய சமுதாயத்தை கூப்பிடுகிறான்...எதற்கு?தேசத்தின் வருங்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் சமுதாயச் சிற்பிகள் அவர்கள்தானே...அவர்களை பெரியோர்கள் நாம் சரியாக வழி நடத்த வேண்டாமா? சரிதான், அது என்ன அவ்வளவு சுலபமா...வா, நல்ல புத்தி சொல்கிறேன், guide செய்கிறேன் என்றால் அய்யோ ! ஆளை விடுடா சாமி என்று காத தூரம் ஓட மாட்டார்களா...? அறியாதவனா நம் அய்யன்...? என்ன சொன்னால், எப்படி சொன்னால் காரியம் நடக்கும் என்ற psychology தெரிந்த தந்திரவாதி அவன்! ஒரு யுக்தி செய்கிறான்...ஒருவன் நல்லவனோ இல்லையோ, 'அவன் ரொம்ப நல்லவன்டா' என்று good conduct certficate குடுத்து விட்டால், அப்புறம் எதிர்பார்த்ததுக்கும் மேலாக மிகச் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.அது ஒரு tactic -self fulfilment prophecy போல.நீ சரியே இல்லை, உனக்கு போறாது...அப்படி, இப்படி என்று சொல்லாமல்,
ஒளி படைத்த கண்ணினாய், வா வா வா !
உறுதி கொண்ட நெஞ்சினாய், வா வா வா!.....
வலிமை கொண்ட தோளினாய்,.....
எளிமை கண்டிரங்குவாய்....வா வா வா
என்று போற்றி அழைக்கிறான். ஏன் ? கொஞ்சம் தட்டிக் கொடுத்தால் வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டே வரும் வயது என்று இந்த இளைய சமுதாயத்தின் துடிப்பை நன்கு அறிந்த நல் ஆசிரியனல்லவா அவன்!
Emancipation of women ...
நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை கொண்ட புதுமைப் பெண்டிரின் உரிமையை கொண்டாடிய முதல் 'Complete Man ' பாரதி! அதுவும் ஒரு நூற்றாண்டு முன்பே.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ...
என்று பெண்களை முன்னேற்றப் பாதையில் நடக்க அல்ல...களித்து கும்மியடிக்க வைத்த பெண்ணுரிமை patron நம் பாரதி!
என்ன இல்லை அவன் கவிதையில்?
சமூக அக்கறை இல்லையா...?
நாம் செய்யும் செயல்களில் பிழை இருப்பின், அதை தப்பு, தவறு, சிறுமை, கொடுமை, குற்றம் என்று பிரித்து பாகு படுத்துவோம். ஆனால் ஜாதி பேதம் என்கிற செயலை, பாரதி தவறு என்றோ குற்றம் என்றோ கூட சொல்வதில்லை...
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
பாவம் -என்று சம்மட்டியால் ஒரே அடி வைக்கிறான்.பிராயச்சித்தமே இல்லாத பாவம்!
அறச் சீற்றம் இல்லையா?
தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
என்று தார்மீகக் கோபம் வளர்ப்பான்...
பாதகஞ்செய்வோரைக் கண்டால்
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா...
மோதி மிதித்து விடு பாப்பா, அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று ரௌத்திரம் பழகச் சொல்வான்