Friday, May 15, 2015

தமிழ் இனி மெல்லச் சாகும்

அடிக்கடி பிறந்த பொன் நாட்டிற்க்கு போய் வந்ததில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தமிழ்  கூறும் நல்லுலகில் தமிழ் மொழி ஆளுமை மிகவும் குறுகித்தான் போய் விட்டது.

திரைப்படமோ, சமையலோ, கிரிக்கெட் மாட்சோ - சிலாகிக்கும் அளவு இருந்தால்,    'சூப்பர் ', 'awesome ', 'சான்சே இல்ல'   என்கிற மூன்றே மூன்று வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகிறார்கள். அதுவே மோசமாக இருந்தால் இன்னுமே சிக்கனம்- 'ஒரே மொக்க'  இரத்தின சுருக்கமாக முடித்து விடுவார்கள். ஒரு வேளை சுருங்கச் சொல்லி விளக்குதல் என்பது இதுதானோ? இரண்டும் கெட்டான் லட்சணமாய் 'கலக்குப்ஹை ' சொதப்புப்ஹை' என்று கலப்படம் வேறு. பாதி தமிழருக்கு 'ழ' என்கிற உச்சரிப்பே அந்நியமாய் போய் விட்டது. 'தமிழ்' என்பதே 'தமிளு ' என்று மருவி விட்டது. நடை முறையில் 'நல்ல' என்பது 'நள்ள ' என்றுதான் செவியில் விழுகிறது. கம்பன், வள்ளுவன்,இளங்கோ,பாரதி என்றொரு வரிசையை கரைத்து குடிக்க வேண்டாம். பேச்சுத் தமிழாகவே இருக்கட்டும், உருப்படியாக இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான்  சொல்ல வேண்டி இருக்கிறது. 'எங்கெங்கு காணினும் சக்தியடா ' என்றது போல் 'சப்ப மாட்டரு ', ரவுசு தாங்கல', கணக்கு பண்றான்',கடலை போடறான் என்பதாய் கொச்சைப்  பிரயோகங்கள்தான் கோலோச்சுகின்றன.

தாய் மொழியின் மேலான பற்றை, ஈடுபாட்டை,ஆளுமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்காதது யார் குற்றம்? வீடும், வண்டியும், வங்கியில் பணமும் சேர்ப்பதற்கு ஏதுவான படிப்புதான் முக்கியம்- தமிழாவது தாய் மொழியாவது? குண்டு சட்டியில குதிரை ஓட்டப் போகிறாயா? பேசாம ஹிந்தி எடுத்துக்கோ, நார்த்ல போஸ்டிங் வந்தாலும் கஷ்டம் இல்ல...தர்ட் லாங்குவெஜ் பிரெஞ்ச் இல்ல ஜெர்மன் படி, ஏன்னா ஒரு foreign language கத்துக்கறது நல்லது ...இந்த நிலைமை உருவாக யார் காரணம்? பள்ளிகளில் ஆங்கிலம், கணக்கு, விஞ்ஞானம் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் மரியாதை தமிழ் வாத்தியாருக்கு கிடைக்கிறதா? மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வகுப்புக்கு செல்லும் போது அந்த பிரிவுக்கு யார் கணக்கு,ஆங்கிலம்,விஞ்ஞானம் கற்றுத் தரும் ஆசிரியர் என்று மண்டையைக் குடைந்து கொள்ளும் பெற்றோர் யார் தமிழ் சொல்லித் தரப் போகிறார் என்று ஆவல் கொள்கிறார்களா? சொந்த தாய் மொழியின் மேல் ஏன் இந்த அசிரத்தை? 

ஜீன்ஸ் அணிந்து தலை விரித்து 'செம்மொழியான தமிழ் மொழியா....ம்ம்ம்ம்' என்று வாய் திறந்து பாடுவோரில் எத்தனை பேருக்கு தமிழ்த் தாய் வாழ்த்து தெரியும்? ரொம்ப பேசினால் அதையும் ரீ மிக்ஸ் செய்து 'youth friendly ' என்கிற பேரில் YouTube ல் வைரல் ஆகச் செய்ய எல்லா விதமான முயற்ச்சிகளிலும் காசு இறைப்பார்கள்.

'சங்கம் வளர்த்த தமிழ்' என்று மேடைகளில் முழங்கினால் போதுமா? அந்த சங்கத் தமிழ் என்னவென்று பெரும்பான்மை தமிழர் அறிவரா ? மொழி, அதுவும் தாய் மொழி என்பது வெறும் வார்த்தை பரிமாற்றத்திற்க்கான கருவி மட்டுமா? ஒரு இனத்தின் பாரம்பரியமும், கலாச்சாரமும், வளர்ச்சியும் சேர்ந்த அடையாளம் இல்லையா? நவ நாகரீகம், வளர்ச்சி ,முன்னேற்றம் என்கிற பேரில் தன் இனத்தின் அடையாளத்தையே தொலைத்து நிற்கும் ஒரு தலைமுறையை உருவாக்கி , அந்த முண்டாசுக் கவிஞன் முன்பு கூறத் தகாதவன் ஒருவன்  கூறிய கொன்றிடல் போலொரு வார்த்தையை நாம் சிரத்தையாய் செயலாக்கிக் கொண்டிருக்கிறோம்.....