Thursday, January 7, 2016

நான் கண்ட பாரதி-2

தாய் மொழியான தமிழின் உயர்வைப் பாடாமல் இருப்பானா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் 
இனிதாவதெங்கும் காணோம் 

என்றானே...மொழி வெறியனோ? என்று ஐயப்பாடு தோன்றும்...மொழிப் பற்று என்பது வேறு, கண் மூடித்தனமான வெறி என்பது வேறு என்று அறிந்த விவேக சூரியன் (ஞான பானு) அவன்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலே மகிமை இல்லை 

என்று அறிவுறித்தி,

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் 
இறவாத புகழுடைய புது நூல்கள் 
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் 

என்று மொழியின் வளர்ச்சிக்கு வித்திடுவான்.

தாய் மொழியைப் பாடியவன் தாய் நாட்டை  மறப்பானா?

பாருக்குள்ளே நல்ல நாடு,எங்கள் பாரத நாடு 

என்று பெருமை பேசி,ஒளி  மயமான எதிர் காலத்தை கனவு கண்டு, புதிய கோணங்கியாய் நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என்று குறி சொல்வான்.
திரைப் படங்களிலே காதலனும் காதலியும் மண முடித்தால் 'and they lived happily ever after ' என்று முடித்துவிடுவார்கள்...வாழ்க்கை என்னும் பெரிய கதை இனிமேல்தான் துவங்கப் போகிறது என்பதை மறந்து.அதே போல், விடுதலை மட்டுமே லட்சியம் என்றில்லாமல், விடுதலைக்குப்பின் இந்த நாட்டை எப்படி ஆள்வது, என்னென்ன செய்ய வேண்டும் என்று,தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றப் பாதையையும் துறை வாரியாக - department wise -planning செய்கிறான்.

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் 
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் 
.....காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் 
கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் 

என்று தொழிலுக்கும் ,கல்விக்கும்,கலைகளுக்கும் பசுமைக்கும் குரல் கொடுக்கின்றான்.Inter linking of rivers  பற்றி அன்றே பாடி விட்டான்.

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் 
என்று ஒரு தீர்கதரிசியால் மட்டுமே உணர்ந்து சொல்ல முடியும்.

மகாகவி மட்டுமா, கவித்துவம் வாய்ந்த ரசிகனும் கூட.
சமத்துவம், பெண்ணுரிமை, மொழி, தேசம்...சரிதான் படு serious ஆனா ஆசாமிதான் என்று தோணும். ஆனால் அவனைப் போல் உணர்ச்சியும், மகிழ்ச்சியும், ஆசையும், காதலும் சேர்ந்த ரசிகன் வேறொருவர் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம்.இல்லை என்றால், கிழிந்த மேலாடைக்கு மாற்று துணி இல்லாமல், கருப்பு கோட் அணிந்து அதை மறைத்து திரிந்த வறுமையிலும், 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா, இறைவா 

என்று மகிழ்ந்து கூத்தாட சாதாரண மனிதனால் சாத்தியமா? 
காணி நிலம் வேண்டுவான்..அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் 'அழகிய 'தூணும் நன் மாடங்களும் கொண்டதாய்' ஜஸ்ட்ஒரு மாளிகை...' இன்னும் கேணி...தென்னை மரமும் இளநீரும்..தென்னை மரம் காற்றிலாட தென்றலும், தென்னங்கீற்றின் ஊடே வரும் நிலா வெளிச்சமும் ...குயில் ஓசையும்....அப்பப்பா...போதுமா...? எப்படிப் போதும்...தனிமையிலே இனிமை காண முடியுமா...
ஆதலினால் காதல் செய்வீர் 
என்றவனாயிற்றே  ..ஆகவே, இன்னும் வேண்டுவான்...பாட்டுக் கலந்திட 'பத்தினிப் பெண்ணும்' அவளோடு 'களிக்கக்  கவிதையும்'....

தெவிட்டாத இனிப்பான வாழ்வை இதை விட ரசனையாய் வேண்டிட முடியுமா? அவன் இயற்கையை, மனித வாழ்வை , வாழ்வின் சுவையை அனுபவிக்க ஆசைப் பட்ட ரசிகன்...பின்னர்தான் கவிஞன்.

1 comment:

  1. Nice analysis.

    Of course the rasikan precedes the kavignan. A heightened sensitivity to surroundings accompanied by prolific creativity -- hallmarks of a poet. I wonder if Bharathi was thinking his thoughts in poetry rather than prose :) He left nothing untouched -- every aspect of life was examined...

    ReplyDelete