Wednesday, June 18, 2014

கும்பலோடு கோவிந்தா -1

தினமும் morning assembly முடியும் சமயம் நிறைவாக தேசிய கீதம் பாட வேண்டும் .பாதி பேருக்கு வல்லின மெல்லின பிரயோகங்களில் இடியாப்ப சிக்கல்.ஆனாலும் கோவில் மணி அடிப்பது போல் வாய் மணக்க ‘ஜண கண மண ‘ என்று ஆரம்பித்து ‘பாரத பாக்ய விதாதா ‘ என்பதை ‘பாரதி பார்கவி தாத்தா ‘ என்று கன கம்பீரமாய் பாடும் ஜோர் இருக்கு பாருங்கள்…வீர ரசம் ததும்பும்!
மீதி பேர் நமக்கேன் வம்பு என்று வெறும் வாயை மட்டும் அசைப்பார்கள். ஆனால் சும்மா சொல்லக் கூடாது,சிவாஜி கணேசன் range க்கு வாய் அசைப்பார்கள் . அப்பொழுதுதான் பழி தீர்க்கறாப்பல  டீச்சர் பக்கத்தில் வந்து காதை தீட்டிக்கொண்டு நிற்பார்-நீ நிஜமாகவே பாடறயா இல்ல சும்மா பாவ்லா காட்டறயா என்று தீர்மானிக்க. இந்த மாதிரி வேவு பார்க்கறதுக்கு எல்லாம் தனியா சம்பளம் தராளா என்ன?
ஆனா, நம்ப பசங்க பனங்காட்டு நரிங்கன்னா, இந்த மாதிரி crisis management எல்லாம் ஜுஜூபி மாதிரி. டீச்சர் பக்கத்திலே நிற்கிறதே தெரியாத மாதிரி கண்ணை இழுத்து மூடி, நெற்றியை தீவிரமாய் சுருக்கி அப்படியே ஜோதியிலே ஐக்கியமானாப்பல ஒரு களைய மூஞ்சியிலே கொண்டு வருவாங்க பாருங்க..பின்ன, மாட்டிக்கொண்டா என்ன ஆகும்னு தெரியுமா? தேசிய கீதத்தை மனப்பாடம் பண்ணி ஒப்பி என்றாலாவது ஏதோ பிரயோஜம்னு சொல்லலாம். ஆனா அதை 5 தடவை எழுதி காமிக்கணும்னா எப்பேர்ப்பட்ட தண்டனை அது! ஒரு சில பேர் இதுக்குன்னே ஒரு 2 quire notebook இந்த ஸ்ரீ ராமஜயம் எழுதுவாளே  அது போல வைத்திருந்தார்கள். அதற்க்கும் brown paper cover , label என்று சர்வ அலங்காரங்களும் உண்டு.அதிலும் சில பேர் போறாததற்கு தேசிய கொடியை நல்ல ஸ்ரத்தையாய் முதல் பக்கத்தில் colourful ஆக வரைந்தும் இருப்பார்கள். பின்ன என்னதான் கஷ்டமாம்னு கேக்கத் தோணர்தா உங்களுக்கு?
ஏன் கேக்க மாட்டீர்கள், பட்டாத்தான் தெரியும் பாப்பானுக்குன்னு  தெரியாமலா சொன்னா…நமக்கு இந்த வட மொழி ‘ஜ’வுக்கும் உயிர் எழுத்து ‘ஐ’க்கும் கொஞ்சம் இழுபறி..அதனால் அந்த இடங்களில் மட்டும்  ஹேஷ்யமாய் ஏதோ overwrite செய்து சமாளிப்போம். ஆனால் இந்த வாத்தியார்களும் எங்களை மாதிரி எத்தனை சந்ததிகளை மேய்த்திருப்பார்கள்! அவர்களுக்கு தெரியாதா என்ன?மாட்டிண்டால் சர்வ நிச்சயமாய் பிரம்படிதான்.
ஆனால், என்னதான் சொற் பிழையும் எழுத்துப்  பிழையும் இருக்கட்டுமே ..கடைசியாய் ‘ஜயஹே !ஜயஹே ! ஜயஹே !ஜய ஜய ஜய ஜயஹே !’என்று வருமே, அப்போ 1000 மத யானைகள் பிளிறினாப்பல உத்வேகத்தோடு ஒரு கோஷம் எழும்பும் பாருங்கள்..( ஸ்கூல் மைதானத்தில் காலை இளம் வெய்யிலில் சுகமாய் அரைத் தூக்கம் தூங்கிண்டு இருக்கும் தெரு நாய்  எல்லாம் பதறிப்போய் ஈன ஸ்வரத்தில் ”வாவ் வாவ்” என்று குரைத்துக்கொண்டு  வாலை பின்னங் காலுக்குள் சுருட்டிக் கொண்டு எடுக்கும் பார் ஓட்டம்..)  அந்த Tagore வந்து பார்த்தால்  மெய் சிலிர்த்துப் போவார் அடடா, என்ன ஒரு தேசப் பற்று என்று…!

1 comment:

  1. விஜி இந்த ‘ஜனகன மன ‘நிறயபேருக்கு இன்னும் தெரியாது, அட்லீஸ்ட் நம்மபரவாயில்லை, இப்ப நிறைய ஸ்கூலில் தினம் தோறும் பாடுவது கிடையாது, டீச்சர்களும் குடுத்த பணத்திற்கு கிளாசில் கத்தி விட்டுப் போகிறார்கள். என்னோட சின்ன வாண்டு பேத்தி அவ்ள அழகா பாடுறாள் இந்த தேசிய கீதத்தை.
    நீ சொல்றா மாதிரி ஜயஹே !ஜயஹே ! ஜயஹே !ஜய ஜய ஜய ஜயஹே !பாடுறது, பஜனைல கடசில ‘ஜெயா மங்களம் பாடுறா மாதிரி, இதுல பிரசாதம் கிடைக்கும் அதுல அசெம்ப்ளி முடிஞ்சிடும். அவ்ளோதான்.
    கும்பலோடு கோவிந்தான்னவுடனே நான் நினைச்சேன் நீ தியாகராஜர் ஆராதனையைபத்தித் தான் எழுதப் போறாயோன்னு , ஏன்னா எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது. பஞ்ச ரத்ன கீர்த்தனைம் போதுப் பாக்கணும், இதே கும்பல்ல கோவிந்தா அப்ளை பண்ணனும். நெறைய பேருக்கு கீர்த்தனையே தெரியாது, சும்மா பொஸ்தகத்த வச்சுண்டு பாவ்லா பண்ணுவா.
    எல்லாம் இந்த மயம் , புவியில் இயற்கையினாலே இயங்கும் எழில் மயம்.

    ReplyDelete