Tuesday, July 21, 2015

அந்த நாள் ஞாபகம் -Part 1

இந்தக் கால தமிழ் சினிமா உலகில் பெரும்பாலும் பின்னணிப் பாட்டு என்கிற பெயரில் வலம் வரும் ஓசையைக் கேட்க கேட்க 
     எம் எஸ் வீயும் ராஜாவும் கொடி  கட்டிப் பறந்த 
     அந்த நாளும் வந்திடாதோ ..
என்று ஏக்கம் வருகிறது.

கொச்சைத் தமிழில் பாடல். அதற்கு பீட் மட்டுமே பிரதானமாய் காட்டுக் கூச்சலாய்  ஓசைக் கோர்வை. கவிதைத்துவம் இருந்தாலும், பாடலின் வரிகள் காலத்திற்கும் நினைவில் நிற்கும்படி ஜீவனுள்ள இசை அமைப்பு உண்டா என்றால் இல்லை என்றுதான் பெரும்பாலும் சொல்ல வேண்டும். பூக்கள் பூக்கும் தருணம் ( மதராசப் பட்டணம்), கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்), ஆனந்த யாழை மீட்டுகிறாய் ( தங்க மீன்கள்) போன்ற சில பாடல்கள் விதி விலக்கு .புல்லாங்குழலின் கானமோ, ஒரு பியானோவின் கம்பீரமோ, வீணையின் நாதமோ, கிடாரின் ஜாலமோ அந்த அந்த இசைக் கருவியின் தனித்துவத்துடன் பாடலுக்கு உயிரூட்டுவதாய்....ம்ஹூம்..எல்லாம் டிஜிட்டல் மயம் ! 

சின்னக் கண்ணன் அழைக்கிறான் ( கவிக்குயில்) பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசைக்கும், என்ன என்ன வார்த்தைகளோ  (வெண்ணிற ஆடை) பாடலில் இடம் பெரும் பியானோ ஒலிக்கும் இளைய நிலா பொழிகிறது (பயணங்கள் முடிவதில்லை) பாடலில் ஊடுருவி கலந்திருக்கும் கிடாரின் dynamicsஇற்கும் , கண் போன போக்கிலே கால் போகலாமா (பணம் படைத்தவன்) வில் அக்கார்டியன் தரும் grandiose feel ற்கும் தேவியர் இருவர் முருகனுக்கு ( கலைக் கோவில்) பாடலின் வீணை நாதத்திற்கும் , அன்றொரு நாள் இதே நிலவில் (நாடோடி) பாட்டில்  ஹார்மோனியமும்  ...ஆஹா..அக்கம் பக்கத்து வீட்டாரின் சொத்தையும் சேர்த்து எழுதிக் கொடுத்து விடலாம். அப்படி மயக்கும் இசை மழை பொழிந்த தமிழ் சினிமா உலகம் இப்போது வானம் பார்த்த பூமியாக ஆகிப்போனதாய் தோன்றுகிறது. யாரைச்  சொல்லி என்ன லாபம்..

No comments:

Post a Comment