Showing posts with label Thunai Ezhuthu. Show all posts
Showing posts with label Thunai Ezhuthu. Show all posts

Monday, February 23, 2015

வாழ நினைத்தால்

 "வேலையில்லாதவனின் பகல்" -எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ,"துணையெழுத்து" எனும் கதை தொகுப்பிலிருந்து.

"உலகிலேயே மிக நீண்டது எது? சீனாவின் சுவரா,அல்லது நைல் நதி கடந்து செல்லும் வழியா?இரண்டுமில்லை,வேலையற்றவனின் பகல் பொழுதுதான்."

வேலையில்லாத ஒருவன் வீட்டில் நீண்ட பகல் பொழுதை எப்பவும் போல் கழிக்கும் ஒரு நாளில் யாசகம் கேட்டு ஒரு வட இந்திய பெண்மணியும் அவள் இரு குழந்தைகளும் வருகிறார்கள்.பணமோ சாப்பாடோ வேண்டாம், அணிய உடைதான் வேண்டும் என்று புரியாத மொழியில் அவள் எப்படியோ இவனுக்கு புரிய வைக்க, இவன் தன வீட்டிலிருந்து ஒரு புடவையை அவளுக்கு வழங்குகிறான்.இவன் வீட்டு  சுவரில் இருக்கும் கிருஷ்ணன் படத்தையே அவள் உற்றுப் பார்க்கிறாள், கண்ணில் நீர் வடிய.அது அவன் மதுராவில் இருந்து வாங்கி வந்தது. கிருஷ்ணன் மரக்கிளையில் ஊஞ்சலாடுவது போல் இருக்கும் சித்திரம்.அவள் வேண்டாம் என மறுத்தாலும், அவள் குழந்தை ஆசைப் படுகிறது என்று அவன் வலுக்கட்டாயமாய் படத்தைக்  கழட்டி அவள் குழந்தையிடம் கொடுக்கிறான்.தான் குடியிருந்த வீடு பூகம்பத்தில் இடிந்து, கணவனையும்,வளர்த்த பசுவையும், எல்லா உடமைகளையும் ஒரேயடியாய் இழந்ததாகவும், இதே போல் ஒரு படம் அவர்கள் வீட்டில் இருந்ததாகவும் அவள் சொல்லி விட்டு, இவன் தந்த படத்தை தலை மேல் தூக்கி சுமந்து  கொண்டாடியபடி அவர்கள் சென்று விடுகிறார்கள்.

"பூகம்பத்தில் வீட்டை இழந்து,பாஷையறியாத ஊரில் உணவுக்கும், உடைக்கும் அலைந்து கொண்டிருக்கும் வாழ்வில், எந்த வீட்டில்,எந்தச் சுவரில் இந்த கிருஷ்ணனை அவர்கள் மாட்டி வைக்கப் போகிறார்கள்!
ஊரை, நேசித்த மனிதர்களை,சேர்த்து வைத்த செல்வங்களை பூகம்பம் விழுங்கிக் கொண்டபோது கை கொடுக்காத கடவுளை எதற்காக இப்படி நேசிக்கிறார்கள்.அவள் கண்கள் இதைப் பார்த்ததும் ஏன் கசிகின்றன?வாழ்வை நேசிப்பதற்க்குத்தான் வலிமை வேண்டியிருக்கிறது.சந்தோஷத்தில் அல்ல,வேதனையில்தான் வாழ்வின் நிஜமான ருசி தெரிகிறது ".

பின்னொரு நாளில் இவனுக்கு வேலை கிடைத்து வெளியே செல்லும்போது சாலையோர பிளாட்பாரத்தில் அவளுக்கு அளித்த புடவை கண்ணில் பட பேருந்தின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால்,

"புங்கை மரமொன்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது அந்த ஊஞ்சலாடும் கிருஷ்ணன் சித்திரம்.நாலைந்து பெண்களும் ஆண்களும் மரத்தடியில் கூடி வாழத் துவங்கி இருக்கிறார்கள்.புகையும் அடுப்பு கசிய,ரேடியோவில் ஏதோ ஹிந்திப் பாடல் கேட்கிறது.
இழந்து விட்டோம் என்று எதையும் நினைத்து கவலைப்படாமல்,மீண்டும் விரும்பியதை உருவாக்கிக் கொள்வதுதான் வாழ்வின் சாரம் எனப் புரிய வைத்தவளுக்கு கண்கள் தாழ்த்தி நன்றி சொன்னேன்.அதோ,பிளாட்பார மரத்தடியில் சுவர்கள் எதுவுமற்ற ஒரு வீடு உண்டாகிக் கொண்டிருக்கிறது."

- அந்த கிருஷ்ணன் படம் வெறும் சித்திரமா...தொலைத்த வாழ்வின் நினைவுச் சங்கிலி அல்லவா?ஞாபகங்கள் எனும் புதையலை திரும்பக் கொண்டு வந்த தோணி அல்லவா..?மனம் வாடி துன்பம் மிக உழன்று வாழ்வாதாரங்கள் தொலைந்த போதிலும், வாழ்க்கையைத் தொலைக்காமல் ,வாழ்ந்து பார்ப்போம்,வாழ்ந்து காட்டுவோம் என வாழத் துணிந்த அத்தனை மாந்தருக்கும், அவரை வாழ விடும், வாழ வைக்கும் அத்தனை மாந்தருக்கும் என் வந்தனங்கள்.