Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

Thursday, September 25, 2014

சோறு கண்ட இடமே சொர்க்கம்! வயிறே வைகுண்டம்!- Part 2

கேவலம், இட்லிக்கு வந்த வாழ்வை பார்த்தியா...இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.ஆனானப்பட்ட நா.பா. அதான் எழுத்தாளர் நா .பார்த்தசாரதி அவர்கள் வெண்பாவே இயற்றி இருக்கிறார் தெரியுமா? அவரோட 'சத்திய வெள்ளம்' என்கிற கதையில் இரண்டு மாணவர்கள் இயற்றுவது போல் வரும் அந்த வெண்பாக்கள்...

"மங்காப் புகழ் படைத்த மல்லிகைப் பந்தலினிற் 
சங்கர்பவன் தரும் சாம்பாரும் - வெங்காயச் 
சட்டினியும் இங்கிருக்க ஏழுலகில் தேடிடினும் 
இட்டிலிக் குண்டோ இணை"

"வட்ட நிலாப்போல் வாகான இட்டிலியும் 
தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்றழைக்கும்-இட்டமுள்ள 
சட்டினியும் சேர்ந்திருக்கும் இந்நிலையில் இவ்வுலகில் 
இட்டிலிக் குண்டோ இணை"

நம்மைப் போல் சாதாரண மக்கள் வெண்பாவெல்லாம் எழுத முடியாதுதான். ஆனாலும் நாமும் லேசுப் பட்டவர்கள் இல்லையாக்கும்! நாள், கிழமை என்றால் வீட்டில் கோலம் போடுகிறோமோ இல்லையோ, பகவானுக்கு பூஜை செய்கிறோமோ இல்லையோ, படையல், நைவேத்யம் என்கிற பெயரில் நம் வயிற்றுக்கு நல்லாவே பூஜை செய்வோமே,நாமெல்லாம் யாரு....?
நீங்களே வேண்டுமானால் ரூம் போட்டு யோசியுங்கள்..

ஆடி மாசமாச்சே , அம்மனுக்கு கூழ் வார்த்தியா?
விநாயக சதுர்த்தியா , கொழுக்கட்டை பண்ணியா..
ராம நவமியா, கொண்டா பானகமும் நீர் மோரும்..
சத்ய நாராயண பூஜையாமே? மா விளக்கு போட்டியா?
கார்த்திகைக்கு அவல் பொரி , அரிசி பொரி ரெண்டுலயும் உருண்டை பிடிச்சியா (இல்லைன்னா சாமி வேலாலே கண்ணா குத்திடும்)
கிருஷ்ண ஜெயந்தியா- வெறும் அவலும் வெண்ணையும் வெச்சா போறும் ...சின்ன கொழந்தைதானே...ஈஸியா முடிச்சிடலாம்.
லக்ஷ்மி பூஜையா- பணம் கொடுக்கற தெய்வம் ஆச்சே...சும்மா வெறும் கையாலே மொழம் போடலாமா? சக்கர பொங்கல், வடை, சுண்டல், இட்லி,கொழுக்கட்டை, பாயசம்னு அசத்த வேண்டாமா...?
பொண்ணுக்கு சடங்கா- புட்டு செஞ்சியா...
பொண்ணு பார்க்க வராங்களா-சொஜ்ஜி, பஜ்ஜி ரெடியா...

இப்பவே கண்ண கட்டுதே ...கிறு கிறுன்னு தல சுத்துதே...கொஞ்சம் சோடாவ ஒடைச்சு ஊத்தறீன்களா ..ஐயா! 'Sprite ' ஆ இருந்தா இன்னும் better ...உங்களுக்கு புண்ணியமா போகும்... 

சோறு கண்ட இடமே சொர்க்கம் ! வயிறே வைகுண்டம்!- Part 1

தயவு செய்து காலி வயிற்றில் இந்த post ஐ படிக்காதீர்கள். சொன்ன பேச்சை கேட்காமல் மேலே படித்தால், அப்புறம் பசி மிஞ்சிப் போய் பித்தம் தலைக்கு ஏறி மயக்கம் வந்து, சிறு குடலை பெருங்குடல் தின்னும் நிலை ஏற்பட்டு, acidity வந்து வயிறு புண்ணாகி ulcer முத்திப்போய் ...ஏன் விஷப் பரீட்சை..? சட்டுன்னு போய் பழைய சாதத்தில் மோர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கரைச்சு குடிச்சு விட்டு வந்தீங்கன்னா வயிறும் குளிரும், பசி வந்து பத்தும் பறந்து போகாமலும் இருக்கும்.

அப்படி என்ன பழைய சோறுக்கு பெரிய recommendation வேண்டியிருக்கு என்று கேட்கிறீர்களா...பழைய சோறு, நீராகாரம் இதிலெல்லாம் வைட்டமின் நிறைந்து இருக்கு என்று கேள்விப் பட்டதில்லையா ..போனால் போகட்டும், தொடர்ந்து படியுங்கள்...'சேர்ந்தே இருப்பது?'என்று திருவிளையாடல் தருமி போல் என்னிடம் கேட்டீர்கள் என்றால் ஹனுமார் வால் போல் பெரிய லிஸ்ட் வைத்து இருக்கிறேன்.  உதாரணத்திற்கு சில-

வத்தக் குழம்பு-சுட்ட அப்பளம் 
பீன்ஸ் உசிலி-வெண்டைக்  காய் மோர் கொழம்பு 
உருளை ரோஸ்ட்-எலுமிச்சை ரசம் 
மிளகு ரசம்-தேங்காய் சேர்த்த கோஸ் பொரியல் 
பிஸி பேளா பாத்-ஜவ்வரிசி வடாம் 
தயிர் சாதம்- வடு மாங்காய், மோர் மிளகாய்.

என்ன, நாக்கில் எச்சில் ஊறுகிறதா ..இத, இத, இதத்தான் நான் எதிர் பார்த்தேன். இந்த item எல்லாம் made  for  each other ஆக்கும்! சென்னை பாஷையில் சொல்வதென்றால், சான்ஸே இல்ல, இல்ல,சான்ஸே இல்ல!

அடடா, நல்ல சாப்பாட்டு ராமனிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என நினைக்க தோணுகிறதா....ஆமா, சீதா /ஜானகி/கல்யாண/கோதண்ட/வெங்கட் ராமன் தெரியும். அது என்ன சாப்பாட்டு ராமன்? இந்த காரணப் பெயரின் etymology தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் nala 's ஆப்பக்கடை வழங்கும் ரூபாய் 2000 மதிப்புள்ள ஒரு gift coupon இலவசமாய் அளிக்கலாம். அப்புறம் குஷ்பு இட்லி, குஷ்பு இட்லி என்கிறார்களே, எந்த ஓட்டலிலாவது மெனு கார்டில் குஷ்பு இட்லி என்று பிரிண்ட் செய்து இருந்தால், அந்த ஓட்டல் சொந்தக் காரரின் ஜன்மம் சாபல்யம் ஆக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.