
கல்லூரி நாட்களில் தோழிகளுடன் நடந்த அக்கப் போரில் ஒரு விஷயம் சர்வ நிச்சயமாக தெரிந்தது..எங்கள் அனைவருக்கும் மணவாளன் வந்தியத்தேவன் போலவே தான் அமைய வேண்டும் என்று. ( ஏம்மா! பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..? என்று கௌண்டமணி கேட்டாற்போல்). பெயர் அளவில் கதையின் நாயகன் அருள் மொழி வர்மன் (பின்னாளில் ராஜ ராஜ சோழன்) ஆனபோதிலும், வாசகர்களைப் பொறுத்த வரை கதாநாயகன் வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனே. கதையின் ஆதியிலும் அந்தத்திலும் ஐந்து பாகங்களிலும் வியாபித்து , கதையின் எல்லா பாத்திரங்களுடன் தொடர்பு கொண்டு சர்வ வ்யாபியாய் இருப்பவன் அவன் ஒருவனே.
சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளைப் பற்றி ஒரு கதை கேள்விப் பட்டிருக்கிறேன். மகள் திருமாலை கணவனாக மனதில் வரித்து இருக்கிறாள் என்று உணர்ந்த அவள் தந்தை பெரியாழ்வார் யோசித்தாராம்....அவன் பல நாமங்கள், பல ஸ்வரூபங்கள் கொண்டவனாயிற்றே ..அவற்றில் எந்த ஸ்வரூபன் மேல் இவள் காதல் கொண்டாள் என்று. பரந்தாமனின் திரு நாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் சொல்ல சொல்ல, கேட்டுக் கொண்டே வந்த ஆண்டாள் 'ரங்கநாதன்' என்கிற நாமம் கேட்ட மாத்திரத்தில் முகம் சிவக்கிறாள். தந்தையும் அவள் உள்ளம் கவர் கள்வன் யார் என அறிந்து கொள்கிறார்.
ஆண்டாளின் திருப்பாவை மனப்பாடமாகிப் போன எனக்கு திருமண வயதில் எந்த மாதிரி மாப்பிள்ளை தேட வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது ரகஸிய சினேகிதனாகிப்போனான் வாணர் குல வீரன். தாய் தந்தை முறையாய் தேர்ந்து எடுத்து அழைத்து வந்த தேவனையே வந்தியத்தேவனாய் வரித்து, தர்மம் தவறாமல் இல்லறம் செய்வது வேறு கதை...
ஆபீஸில் உடன் வேலை செய்த ஒரு male colleague தன் திருமணத்திற்கு பெண் தேடி, "கோடிக்கரை பக்கம் போய் அலைந்து விட்டு வந்தேன் madam , பூங்குழலி போல் ஒருத்தி கண்ணிலே படுவாளா என்று பார்க்க..." என்ற போது ஆஹா,, என்னைப் போல் ஒரு ரசிகன் என்று மனம் குளிர்ந்தது.
திருமணம் ஆகி பல வருஷங்கள் கழித்து மாமியார் வீட்டில் பழையன கழிதல் நடந்தபோது புதையல் ஒன்று கண்டெடுத்தேன். தொடர் கதையாய் வெளி வந்த 'பொன்னியின் செல்வன்' காவியத்தின் ஐந்து பாகங்களின் தொகுப்பை.
"தாராளமாய் எடுத்துண்டு போயேன்..." என்ற மாமியாரை அப்படியே எகிறி கட்டி அணைத்து முத்தம் கொடுத்தேன். இதை விட பெரிய கொடை வேறென்ன இருக்க முடியும்?

என்னுடைய 'bucket list ' ல் முக்கிய அங்கம் 'பொன்னியின் செல்வன் Walk 'கிற்கு உண்டு- தந்தி டிவியில் வரும் ப்ரோக்ராம் 'யாத்ரிகன்' மாதிரி. இதோ கல்கியில் teaser advertorial பொன்னியின் செல்வன் திரும்பவும் தொடராய் வரப் போகிறது என்பதாய். ஆஹா, யார் படம் வரையப் போறா...? வேறு எந்த கதைக்கும் இந்த கேள்வி உடனே எழும்பாது.ஏனென்றால், பொன்னியின் செல்வன் என்றவுடன் நினைவுக்கு வருவது மணியம் அவர்களின் உயிரோட்டம் நிறைந்த கை வண்ணமே. One cannot speak of one without remembering the other . வினு, மணியம் செல்வன்,பத்ம வாசன், வேதா ...எத்தனை பேர் கை வண்ணத்தில் எத்தனை முறை வந்தாலும் திரும்பத் திரும்ப படித்து திளைக்க வாசகர்கள் தயார் தான். அமரத்துவம் வாய்ந்த இந்த காவியத்தை நினைத்தாலே இனிக்கும்...படிக்கப் படிக்கப் பரவசம்...
P S : இது பொன்னியின் செல்வன் காவியத்தைப் பற்றிய பதிவு அல்ல. அந்தக் காவியம் என் வாழ்வில் பதித்த சுவடுகளின் பதிவு மட்டுமே.