"இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் ..மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தியாகிகள் தினம் காலை 9 மணி அளவில் அனுசரிக்கப் பட இருக்கிறது..."
கொஞ்சும் தமிழில் காதை வருடிய குரலை அமைதிப் படுத்த மனமில்லாமல் ஜன்னல் அருகில் வந்தால் மேகங்கள் பஞ்சுக் கீற்றாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் மிதந்து கொண்டிருந்தன. என்ன செய்யலாம்...புதியதாய் வெளி வந்திருக்கும் சினிமாவுக்கு போய் 2 மணி நேரம் ஏ ஸி யின் குளுகுளுப்பை காசு கொடுத்து அனுபவிக்கலாமா..மாசக் கடைசி..காசு செலவில்லாமல் என்ன செய்யலாம்..
"மீண்டும் ஒரு முறை உங்களுக்காக இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் ....."
இத்தனை காலம் இதே ஊரில் இருந்தும் அங்கே போனதே இல்லையே. என்னதான் இருக்கும்? ஒரு வேளை ஸ்கூல் படிப்பு இங்கேயே செய்திருந்தால் லஞ்ச் டப்பா, வாட்டர் பேக் சகிதம் history டீச்சர் முன்னே செல்ல கையில் பிரம்புடன் PT மாஸ்டர் பின்னே வர சுற்றுலா என்கிற பெயரில் ஒரு மதியம் கழிந்திருக்குமோ? ஏன், இன்றுதான் போய் பார்த்தால் என்ன? பின்னே வரும் சந்ததியிடம் பழம் பெருமை பேச தோதாய் இருக்கும்.
"மகான் , காந்தி மகான் ...கை ராட்டையே ஆயுதம்..கதராடையே சோபிதம்..." ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாட்டு எங்கிருந்தோ கேட்டது. பள்ளி சீருடையில் சாரை சாரையாய் மாணவ மணிகள். யார் சொல்லிக் கொடுத்தார்கள் அமைதியாய் இருக்க வேண்டும் என்று? கேட் அருகில் ஒரு கதர் ஜிப்பா புத்தகம் ஒன்றை எல்லா குழந்தைகளுக்கும் கோவில் பிரசாதம் போல் கொடுத்துக் கொண்டு இருந்தது. திடீர் என்று இடையே ஒரு சில்க் ஜிப்பாவின் கை.
"சார், இது பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் தான் இலவசம். விலை ரூபாய் 20. தேச பக்தி பாடல்கள் தொகுப்பு."
நீட்டிய வேகத்தில் கை இழுத்துக் கொண்டது. தும்பைப் பூவாய் நரைத்த தலையும், நடுங்கும் கைத்தடியும் , காது மடலே அறுந்து விடும் போல் தொங்கும் பாம்படமும், பொக்கை வாயுமாய் பொது ஜனம். யார் இவர்கள்.. என்ன தேடி வந்தார்கள்.. துணைக்கு வந்தவர்கள் எங்கே.. பழுப்பு கலரில் கூடவா வேஷ்டி விற்கிறார்கள்...கால் செருப்பை ஏன் கழட்டுகிறாரகள் ... கழட்டணுமா என்ன... தொலைஞ்சு போய்ட்டா..ச்சே எங்கே வந்து என்ன நெனைப்பு..
நாமும் கொஞ்சம் sober ஆய் உடுத்திண்டு வந்திருக்கணுமோ...இடத்துக்கு பொருந்துகிறார் போல். எதிரே ஒரு காக்கி உடை.... தன்னிச்சையாய் அவசரமாய் நகர்ந்து போகத் தோணியது.
" ஒரு நிமிஷம்..!" நீட்டிய கையில் மெல்லியதாய் ஒரு புத்தகம்.
"Sorry , எனக்கு புத்தகம் எல்லாம் படிக்க நேரம் இல்லை..."
"இல்லை..நான் ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர். என் அனுபவத்தை எல்லாம் புத்தகமாய்..."
வியர்வையை துடைக்க kerchief எடுத்தப்போ 100 ருபாய் நோட்டு வெளியே விழுந்ததே..பார்த்து விட்டானோ ..
"உங்களைப் பார்த்தா பெரிய இடத்து பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல் டீச்சர் மாதிரி இருக்கு. ."
"நான் என்ன செய்யணும்ணு எதிர் பார்க்கறீங்க..?"
" என் அனுபவத்துல நெறைய ரோடு accidents பார்த்துட்டேன்..கையில மொபைல் கண்ணுல கூலிங் கிளாஸ் னு ஜாலியாய் வந்து கிட்டே இருந்தவன் கண்ணு முன்னாடி செதறு தேங்கா மாதிரி எகிறி..."
"போதும் இதுக்கு மேல எனக்கு தாங்காது..என்ன வேணும்கறத சீக்கிரம் சொன்னா.."
" அதான் ..அடி பட்டவன்..அடிச்சுட்டு ஓடினவன் கோர்ட்டு கேசுன்னு குடும்பமே கலஞ்சு போய் பார்த்திருக்கேன்...என்ன பண்ணியும் திருந்த மாட்டேங்கறாங்க...அதான் என் அனுபவத்த எல்லாம் என் சொந்த செலவில புஸ்தகமா போட்டிருக்கேன்..10ம் கிளாஸ் 12ம் கிளாஸ் புள்ளங்களுக்கு இலவசமாய் கொடுக்கறேன்..இத ஒரு தடவ படிச்சா எவனும் டிராபிக் ரூல்ஸ மீறவே மாட்டான்..."
"நான்...நான்.. என்ன செய்யணும்ணு எதிர் பார்க்கறீங்க..?"
"நீங்க உங்க பள்ளிகூடத்துல அனுமதி வாங்கி குடுத்தா எத்தனை காப்பி வேண்டுமானாலும் இலவசமாய் கொண்டு வந்து தர்றேன்...எப்படியோ புள்ளைங்க படிச்சு பொறுப்பா நடந்து கிட்டா சரி.."
இப்படி எல்லாம் கூட இருக்கிறார்களா...கண்டா முண்டா சாமானை கூட quikr ல் காசுக்கு விக்கும் நான் போய் இவனை...தப்பு தப்பு..இவரை...
ஒலி பெருக்கி திடீர் என்று தொண்டையை கனைத்தது.
"அடுத்தபடியாக உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச் சரிவில் சிக்கிய பொது ஜனங்களை மீட்கும் பணியில் தன்னுயிர் நீத்த இந்திய வாயு சேனை வீரர்.....அவர்களின் தாய்....அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..."
இவளா..மிஞ்சி மிஞ்சிப் போனால் 35 வயது கூட இருக்காது போல இருக்கே...ரொம்ப சாதாரண குடும்பம் போல இருக்கே...என்ன கொடூரம் இது....
"தேச மக்களுக்காக தன் உயிரையே பணயம் வைத்த அம்மாவீரனின் சேவையை மெச்சி அவர் பிறந்த பொன் நாடு அவர் அன்னைக்கு போர்த்தும் பொன்னாடை...."
என்ன செய்வாள்...அவன் படத்துக்கு போர்த்துவாளா? இல்லை புத்திர சோகத்திலே அதிலே மொகம் பொதைச்சு அழுவாளா.. இல்லே வித்து காசாக்கி அவனுக்கே படையல் செய்வாளா...எதுக்கு பிரயோஜனம்...
வாசல் பாத்து கண்கள் பூத்து காத்து நின்றாலும் இனி வருவானா...இந்த மாதிரி token gestures எதைத்தான் ஈடு செய்யும்...இல்லை இல்லை..இதுவாவது செய்கிறார்களே...பேசாமல் தாலுகா ஆபீஸில் குமாஸ்தா வேலைக்கு அனுப்பி இருக்கலாமோ...அம்மாவிற்கு பிள்ளையாய் பத்திரமாய் இருந்திருப்பானோ...
யார் இவர்கள்..?.எதற்காக இப்படி தன் சம்பளத்தையும் உயிரையும் முகம் தெரியாத யாருக்காகவோ இழக்கத் துணிந்தார்கள்...?
வெளியே வந்தபோது கண் கலங்கி மனசு கனத்துப் போய் தொண்டையில் ஏதோ அடைத்தாற் போல் இருந்தது. யார் பிழைக்க...? நான் பிழைத்தால் அவன் வீட்டில் தீபாவளியா...?
என்ன இது...ஏனிந்த கூட்டம்...இன்னொரு த்யாகிகள் அஞ்சலி ஊர்வலமா...ஒரே கோஷமாய் இருக்கே...
"பாசத் தலைவனுக்கு ...பிறந்த நாள் வாழ்த்து...!"
தள்ளாதீங்க...தள்ளாதீங்க...
"மதுரை வீரன்....! வாழ்க!"
நகரு...நகரு...என்ன செய்யப் போகிறார்கள்...
அஞ்சா நெஞ்ஜன் ....! வாழ்க...!
டமார்....வெடியிலிருந்து தெறித்த ஏதோ ஒன்று மேலே எகிறி முகத்தில் விழுந்தது.
அய்யோ ...ராமா...!