Saturday, July 26, 2014

‘தூர்’ என்ற தலைப்பிலே கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய இந்த கவிதை ‘கணையாழி’ பத்திரிகையில் 33ஆவது ஆண்டு மலரில் வெளி வந்தது. எழுத்தாளர் சுஜாதாவால் பிரசுரத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த கவிதையை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் சுஜாதா சிலாகித்து பேசி படித்துக்காட்ட,பார்வையாளர்களில் ஒருவரான இயக்குனர் பாலு மகேந்திரா வெகுவாக அந்த கவிஞரின் பால் ஈர்க்கப்பட்டார்.பின்னர் ஒரு நாளில் நா. முத்துக்குமார் அதே இயக்குனரிடம் துணை இயக்குனராக சேர இந்தக் கவிதை வழி வகுத்தது. ( ஆனந்த விகடன் 26.3.2014)
தூர் 

“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.
கொட்டாங்கச்சி,கோலி,கரண்டி
துருப்பிடித்த கட்டையோடு உள் விழுந்த
ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா  சேறுடா ‘ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேபோனார்
மனசுக்குள் தூர் எடுக்க”

No comments:

Post a Comment